இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதன்படி இன்னும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையமாக செயல்பட உள்ளது.
இத்தகைய சூழலில்தான் மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 83). ஓய்வு பெற்ற விமானப்படை வீரரான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது உடலை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான ஆராய்ச்சிக்காக உடல்தானம் செய்திருந்தார். இந்நிலையில் அவர் நேற்று (28.05.2024) மரணமடைந்த நிலையில் உடலை ஒப்படைக்க மருத்துவக் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது. ஆனால், மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால் உரிய அனுமதி பெற்ற பிறகே உடற்கூறியல் (Anatomy) அறைக்கு உடலை கொண்டு செல்ல முடியும் என மருத்துக் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உரிய அனுமதி கோரி தந்தையின் உடலுடன் அவரது மகன் சுவாமி நாதன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உரிய அனுமதி வழங்கிய நிலையில், வேலுச்சாமியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மறைந்த தந்தையின் உடலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மகனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.