தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தில் இன்று (31.12.2020) காலை, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட தமிழக முதல்வர், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தன்னுடைய பிரச்சாரத்தை முடித்துவிட்டு, மாலை 6.45 -க்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
நாமக்கல் மாவட்டத்தில் துவங்கி திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். மக்கள் ஆதரவும் வரவேற்பும் தந்தனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, நாங்கள் தனியாக முதன் முதலாகத் தேர்தலை சந்திக்கிறோம். எனவேதான், நாங்கள் முன்கூட்டியே இந்தப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம்.
திமுகவில் 5 ஆண்டு காலம் பாரதிய ஜனதா கட்சி இணைந்திருந்தது. அப்போது சிறுபான்மையினர் திமுகவை ஆதரித்தார்கள். அவர்களை மக்கள் ஆதரிக்கும் போது எங்களை ஆதரிக்க மாட்டார்களா? திமுக தலைவர் கொடுத்த மனுவில் முற்றிலும் பொய் மட்டுமே இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து கட்சியைப் பிளவுபடுத்த ஸ்டாலின் முயற்சிசெய்து வந்தார். ஆனால், நாங்கள் அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றிபெற்றோம்.
ஒன்றரை வருடத்திற்கு முன் கேன்சல் செய்த டென்டரை வைத்து இப்பொழுது ஸ்டாலின் இப்பிரச்சனையை முன்வைக்கிறார். என்னுடைய பெயரே எடப்பாடிதான், என்னுடைய பெயரிலேயே சட்டமன்றத் தொகுதி இணைந்துள்ளது. அதைவிட்டு வேறு எந்தத் தொகுதியிலும் நிற்கப்போவதில்லை. 2,500 ரூபாய் கொடுப்பது சுயநலம் என்றால், ஸ்டாலின் 5,000 ரூபாய் கொடுக்கச் சொல்வது என்ன?
இன்ஜினியரிங் மாணவர்களுக்கான 'ஆல் பாஸ்' அறிவிப்பு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அதுகுறித்து எதுவும் பேசக்கூடாது. எல்லாக் கட்சியிலும் கண்டிப்பாக உட்கட்சிப் பூசல் இருக்கும் என்றார்.