தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தற்போது நிலவிவருகிற நோய்த் தொற்று அபாயத்தை சமாளிக்க ஒவ்வொரு குடும்பங்களிலும் போதுமான வருமானம் இல்லாததால், அரசாங்கமே முன்வந்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4,000 கரோனா நிவாரண தொகையாக வழங்க முடிவுசெய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, முதல் தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் திட்டமானது நேற்று (14.05.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரும் இத்திட்டத்தை துவங்கி வைத்தனர்.
அதன்படி இன்றுமுதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,373 நியாயவிலைக் கடைகள் மூலம் 8 லட்சத்து 7 ஆயிரத்து 165 குடும்ப அட்டைதாரர்களுக்கு நோய்த் தொற்று நிவாரண உதவித் தொகையான ரூபாய் 2,000 முதல் தவணையாக வழங்கப்பட உள்ளது. இதற்கென்று திருச்சி மாவட்டத்திற்கு ரூபாய் 161.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று நியாயவிலைக் கடைகளில் நேரடியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரண உதவித்தொகையை வழங்கி அமைச்சர் கே.என். நேரு திட்டத்தை தொடங்கிவைத்தார்.