நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கன மழையால், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், கடும் அவதிக்குள்ளான உள் நோயாளிகள், பாதுகாப்பு கருதி, வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஆக. 28ம் தேதி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் மாவட்டத்தின் மேலும் சில பகுதிகளிலும் கன மழை பெய்தது. குறிப்பாக, ராசிபுரத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
ராசிபுரத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்தது. உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அறைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், நோயாளிகள் கால்களை தரையில் வைக்கவே பயந்தனர். இதனால் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் சூழ்ந்த அறைகளில் இருந்த நோயாளிகள் வேறு அறைகளுக்கு பத்திரமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இரவு முழுவதும் உள்நோயாளிகள் கடும் குளிரில் மேலும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஆக. 29) நேரில் ஆய்வு செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ராசிபுரத்தில் மட்டும் 200 மி.மீ., மழை பெய்துள்ளது. எதிர்பாராத கன மழையால் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நோயாளிகள் மாற்று அறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும் காலங்களில் மழைநீர் புகாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.