அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவருக்கு பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்பு காரணமாக நவ. 8-ம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நேற்று முன்தினம் (15.11.2022) காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.
பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன் வந்து மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்து பிரியா உயிரிழந்தது தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கால்பந்து வீராங்கனையின் உறவினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து, “எங்களுக்கு என்ன தேவையோ அதைத் தான் அரசு எங்களுக்கு செய்துள்ளது. வீட்டிற்கு வந்து ஆறுதல் சொல்லுவார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை. பிரியாவின் ஆசை கால்பந்து தான். அவளது ஆசையை முதல்வர் என்னை நிறைவேற்றச் சொல்லி இருக்கிறார்” எனக் கூறினர்.
பிரியாவின் தந்தை செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது, “பிரியா இறந்து விட்டாள். பிரியா மாதிரி எத்தனையோ பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதாவது உதவி செய்யுங்கள். பிரியாவாகவே அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள் என்று முதல்வர் கூறினார். எங்கள் வீட்டினை வந்து அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் பார்த்தனர். அதன் பின் வீடு கொடுக்க முதல்வரிடம் சொல்லி ஏற்பாடு செய்துள்ளனர். என் மகள் இறந்துவிட்டாள். அரசு சார்பில் எங்களுக்கு நிவாரணம் வழங்கி எங்களுக்கு நல்லது செய்துள்ளனர். என் மகள் தான் போய்விட்டாள்” எனக் கூறினார்.