விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவருக்குச் சொந்தமாக நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் மின் மோட்டார் இணைப்புடன் பாசனக் கிணறு உள்ளது. அதில் விவசாயம் செய்வதற்குத் தேவையான தண்ணீர் இல்லாததால் அதே பகுதியில் புதிதாக அரவிந்தன் போர்வெல் போட்டுள்ளார். அந்த போர் வெல்லுக்கு பழைய கிணற்றில் தண்ணீர் இரைத்த பம்பு செட் மின் இணைப்பை புதிய போர்வெல்லுக்கு மாற்றி மின் இணைப்பு தருமாறு சிட்டாம்பூண்டி மின்துறை அலுவலகத்தில் அரவிந்தன் விண்ணப்பித்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உதவி செயற்பொறியாளர் ஜெகன் மோகன், மின் இணைப்பை மாற்றித் தருவதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் அரவிந்தன் ரூ.5 ஆயிரம்தான் தருவேன் எனக் கூறையுள்ளார். அதற்கும் செயற்பொறியாளர் ஜெகன் மோகன் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அரவிந்தன் சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி ஆகியோர் கொண்ட டீம் நேற்று சிட்டாம்பூண்டி மின்துறை அலுவலகத்தைக் கண்கானித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அரவிந்தன், பொறியாளர் ஜெகன் மோகனிடம் லஞ்சப் பணத்தைக் கொடுத்துள்ளார். அதை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்து ஜெகன் மோகனை கையும் களவுமாகக் கைது செய்தனர்.