வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதோடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டது.
அதே சமயம் தமிழகத்தின் கோவை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கோவையில் உள்ள சுரங்கப் பாதைகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து சுரங்கப் பாதைகளில் மோட்டார்கள் வைத்து தண்ணீர் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை மாவட்டம் ரத்தினபுரி என்ற இடத்தில் ரயில்வே சுரங்கப் பாதை ஒன்று உள்ளது. அங்கு மழை நீர் தேங்கி இருந்த நிலையில் அப்போது அந்த வழியாக 20 பயணிகளுடன் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அரசு பேருந்து ஒன்று வழியாக வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கப்பாதையில் உள்ள வெள்ளத்தில் பேருந்து சிக்கிக் கொண்டது இதனையடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்பு படையினர் உடனடியாக பேருந்தில் இருந்து பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். முன்னதாக நேற்று இந்த சுரங்கப்பாதையில் தனியார் பேருந்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.