மதுரையில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டிலான அரசு கலைக் கல்லூரி - முதல்வர் திறந்து வைத்தார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை அருகே ரூ.7.25 கோடி மதிப்பீட்டிலான அரசு கலைக் கல்லூரியை திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வண்ணம் புதிய அரசு கலைக் கல்லூரியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.
தமிழக சட்டமன்றத்தில் 110ஆவது விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்ட, திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கப்பலூரில் அரசு கலைக்கல்லூரி கட்டுமானம் முடிந்து திறப்புவிழாவுக்காகக் காத்திருந்த நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய தமிழக முதல்வர் கலந்து கொண்ட இவ்விழாவிற்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். அமைச்சர்கள் அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜீ, ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், கடம்பூர் ராஜீ, ராஜலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத்துரை ஆகியோர் வரவேற்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, ஏ.கே.போஸ், நீதிபதி, பெரியபுள்ளான், மாணிக்கம், சரவணன் ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்வர் தூத்துக்குடியில் நடைபெறும் விழாவிற்காக சாலை மார்க்கமாகப் புறப்பட்டுச் சென்றார்.