Skip to main content

கொசு ஒழிப்பு பணிக்காக அரசு ரூ.16 கோடி ஒதுக்கீடு

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
கொசு ஒழிப்பு பணிக்காக அரசு ரூ.16 கோடி ஒதுக்கீடு

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம், நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

இதில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் மோகன்பியாரே, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் குழந்தைசாமி, சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் போது, டெங்கு காய்ச்சல் பரவும் விதம் பற்றியும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள முக்கிய இடங்களான, சென்டிரல் ரெயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு நேரில் சென்று நிலவேம்பு கசாயம் வழங்குவதற்காக மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் 35 வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

சென்னை மாநகரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு நேரில் சென்று நிலவேம்பு கசாயம் வழங்க மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் 3 நாட்களுக்குள் சுமார் 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ துறையின் சார்பு நிறுவனமான ‘டாம்ப் கால்’ நிறுவனம் மூலமாக ஒரு நாளைக்கு சுமார் 2 ஆயிரம் கிலோ நிலவேம்பு கசாய பொடி உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட நிலவேம்பு கசாய பொடியை அரசு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சி துறைகள் ஆகியவைகள் மூலம் பொது மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். 

டெங்குவை ஒழிக்கும் பொருட்டு அரசு நிறுவனங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிக்காக ரூ.16 கோடியே 41 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களின் ரத்த மாதிரியை எடுத்து அவர்களுக்கு எந்த விதமான காய்ச்சல் வந்துள்ளது என்பதை ‘40 வினாடிக்குள்’ தெரிந்து கொள்ள ஏதுவாக, ரூ.23 கோடியே 50 லட்சம் செலவில் 837 நவீன ரத்த அணு கருவிகள் வாங்கப்பட்டு அதை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்