Skip to main content

டெல்லி மாநிலத்தின் மூன்றாவது பெண் முதல்வர்! யார் இந்த அதிஷி?

Published on 17/09/2024 | Edited on 17/09/2024
Adishi will be sworn in as the third woman Chief Minister of Delhi

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான  மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம்  கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில்,அதே வழக்கில் சி.பி.ஐ.யால் விசாரணைக்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இருந்துவந்தார்.

இந்த சூழலில்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்ற நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து வெளியே வந்தார். வெளியே வந்த கையோடு, மக்கள் தனக்கு நேர்மைக்கான சான்றிதழை வழங்கினால் மட்டுமே திரும்ப முதல்வராவேன் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து தொண்டர்களைத் திடுக்கிட வைத்தார். டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி பலரையும் தொற்றிக்கொண்டது. மணிஷ் சிசோடியா, கைலாஷ் கெலாட், அதிஷி, துணைச் சபாநாயகர் ராக்கி பிர்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் விவாதிக்கப்பட்டது.

பரபரப்புக்கு மத்தியில் கட்சி கூட்டம் கூடியது; விவாதங்கள் அனல் பறந்தது. இறுதியாக கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷியையே அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிய, அனைவரும் வழிமொழிந்திருக்கிறார்கள். இதன் மூலம் டெல்லியில் 8வது முதல்வராகவும், சுஷ்மா ஸ்வராஜ்,  ஷீலா தீட்சித்திற்கு பிறகு மாநிலத்தின் மூன்றாவது பெண் முதல்வராகவும் அதிஷி பதவியேற்கவுள்ளார். 

யார் இந்த அதிஷி?

Adishi will be sworn in as the third woman Chief Minister of Delhi

கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி டெல்லியில் பேராசிரியர் விஜயகுமார் சிங் - திரிப்தா வாஹி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் அதிஷி மர்லேனா. இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடப்  பிரிவில் இளநிலை பட்டமும், உதவித்தொகையுடன் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். படிப்பை முடித்த கையோடு, இந்தியா திரும்பிய அதிஷி மர்லேனா சமூக பிரச்சனைக்காகக் குரல் கொடுக்க தொடங்கினார்.  2013 ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட அதிஷி, கட்சியின் கொள்கை திட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார்.

2015 - 2018 காலகட்டத்தில் துணை முதல்வராக இருந்து மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக இருந்த அதிஷி, கல்வித்துறையில் அரசுப் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல முன்னெடுப்புகளுக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். இந்த காலகட்டத்தில் தான் தனது குடும்ப பெயரான மர்லேனா என்ற பெயரை நீக்கிவிட்டு தன்னை அதிஷி என்றே அடையாளப்படுத்திக்  கொண்டார். 2019 நாடாளுமன்ற மக்களைவை தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி பாஜக வேட்பாளர் கௌதம் கம்பீரிடம் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். மனம் தளராமல் கட்சி பணியை ஆற்றிவந்த அதிஷியை, ஆம் ஆத்மி தலைமை கடந்த 2020 ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் டெல்லி தொகுதியில் களமிறக்கியது. கைமேல் பலனாக வெற்றியும் கிடைத்தது.

எம்.எல்.ஏவாக வெற்றிபெற்ற அவர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் கல்வி, கலாச்சாரம், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கொடுத்த பொறுப்புகளில் எல்லாம் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்று சொந்த கட்சியினராலே புகழப்பட்டார். தொடக்கம் முதலே டெல்லி மாநிலத்தின் கல்வி துறையின் மீது கவனம் செலுத்தி வந்த அதிஷி அதில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சியினரையும் தாண்டி மாணவர்களின் குட் லிஸ்டிலும் இடம்பெற்றிருக்கிறார்.