செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி குற்றச்சாட்டு பதிவிற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன. தொடர்ந்து ஜாமீன் மனு மீதான தீர்ப்புக்காக செந்தில் பாலாஜி தரப்பு காத்திருக்கிறது.
இந்நிலையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்துவதற்கான அரசின் அனுமதி உத்தரவை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில் குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என இந்த வழக்கை விசாரித்து வரும் எம்பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செந்தில் பாலாஜி மட்டுமல்லாது இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் அக்டோபர் ஒன்றாம் தேதி குற்றச்சாட்டு பதிவுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.