சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது 14 கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய சூழலில் சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் கைது செய்யச் சென்ற முயன்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையாளர் பிரவேஷ் குமார், காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், “வாகன தணிக்கையின்போது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வந்த வாகனத்தில் கஞ்சா இருந்தது. இதனை கண்காணித்த போலீசார் அப்போது கஞ்சாவுடன் தப்பிச் சென்றவர்களைத் தான் போலீசார் விரட்டிச் சென்று சுற்றிவளைத்தனர். அச்சமயத்தில் காக்கா தோப்பு பாலாஜி, போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். இதனால் தான் போலீசார் பதில் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானது.
இந்த சம்பவத்தில் காக்கா தோப்பு பாலாஜியின் இடது மார்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் படுகாயம் அடைந்த நபரைச் சோதிக்கும்போது உயிர் இருந்தது. அதே சமயம் இந்த தாக்குதலுக்கு பிறகே அந்த நபர் காக்கா தோப்பு பாலாஜி என்பது தெரியவந்தது. இவர் மீது 58 வழக்குகள் நிலுவையில் உள்ளன. காக்க தோப்பு பாலாஜியுடன் உடன் காரில் வந்த மற்றொரு நபரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரில் இருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி பாலாஜியின் தாயார் கண்மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கேஸ் எல்லாம் முடிந்து திருந்தி வாழ்ந்து வந்தான். ஏப்பா ஒரு கல்யாணம் பண்ணிக்கோ அப்போதான் போலீஸ் பிடிக்க மாட்டார்கள் என்று பலர் சொல்வார்கள். இதில் போலீசுக்கும் எந்த மோட்டிவ் இல்லை. இது ஒரு பிரச்சனையில் நடந்துள்ளது. சம்போ செந்தில் வர முடியவில்லை. சம்போ செந்தில் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் பணம் கொடுத்து செட்டில் செய்து விட்டான். பாலாஜி எட்டு மணிக்கு என்னுடன் பேசினான். நான் வர்றேன் என்றான் இப்படி வராமல் போயிட்டானே.
என்கவுண்டர் பண்ணியதில் உள்நோக்கம் இருக்கிறது. நாம் பெயர் எடுத்துக்கலாம் என செய்துள்ளார்கள். சம்போ செந்தில் மூஞ்சியை காட்ட மாட்டேன் என்கிறான். அவனை பிடிக்க மாட்டேன் என்கிறார்களே. என் பிள்ளை ஒரு தப்பு பண்ணுச்சுன்னா வீட்டுக்கு ஓடிவரும். எங்க இருக்கிறான் என கேட்டு தேடி வரும் போலீஸ், நீ வந்து ஸ்டேஷனில் உட்காரு என என்னிடம் சொல்வார்கள். ஆனால் சம்போ செந்திலுடைய மனைவி வீட்டில் இருக்கிறாளே. அவளை போலீஸ் பிடிக்க வேண்டியதுதானே. ஏன் அவளை பிடிக்கவில்லை. அப்போ நீங்க எல்லாம் கூட்டு களவாணிகள். யாரும் இல்லைனு அவனை கொன்னுட்டீங்க. என் பையனை சுட்டவரோட குடும்பத்தினர் நாசமா போய்விடுவார்கள். வயிறு எரிகிறது. என்னோட குழந்தை திருந்தி பத்து வருடமாக ஒரு தப்பும் செய்யாமல் இருந்தான். சம்போ செந்திலால் தான் என் மகன் செத்தான்' என்றார்.