டாஸ்மாக் கடைகளில் அண்மைக் காலமாகவே மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதுக்கடைகளுக்குக் கண்காணிப்பு கேமரா பொருத்துவது; கணினி வழி ரசீது வழங்குவது; கட்டுப்பாட்டு அறை அமைப்பது; மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழு அமைப்பது; கூடுதல் விற்பனைக்கு மது விற்பதைத் தவிர்ப்பது; புதிய அளவுகளில் மது விற்பனை செய்வது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ஆலோசனைக் கூட்டம் குறித்துப் பேசுகையில், “மதுக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். மதுக்கடைகளில் எந்த தவறும் நடக்கக் கூடாது என்பதில் அரசு தெளிவான நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். மிகச் சில கடைகளில் தான் புகார்கள் வந்திருக்கின்றன. அதனை ஒழுங்குபடுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். உரிமம் உள்ளவர்கள் மட்டுமே பார்களை நடத்த முடியும். உரிமம் வழங்கும் போது குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி உரிமம் பெற்றவர்கள் பார் நடத்த வேண்டும். இதனை அதிகாரிகளைக் கொண்டு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
உரிமம் இல்லாமல் செயல்படும் பார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் 500 மதுக் கடைகளை மூடினோம். அந்த கடைகளில் மது குடித்தவர்கள் குறித்தும் கண்காணித்து வருகிறோம். அவர்கள் வேறு கடைகளுக்குச் சென்று மது குடிக்கிறார்களா அல்லது குடியை விட்டுவிட்டார்களா என்று கண்காணிக்கிறோம். அவர்கள் குடியை விட்டுவிட்டால். அரசுக்கு அதனை விட மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவும் இல்லை.
வேறு மதுக் கடைக்குச் சென்று மது வாங்கினாலும் தவறு இல்லை. ஆனால் அவர்கள் அதற்குப் பதிலாகச் சட்ட விரோதக் கடைகளுக்குச் சென்று விடக்கூடாது. அதேபோன்று சட்ட விரோதக் கடைகளும் வந்து விடக்கூடாது என்பதை துறை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். டாஸ்மாக்கில் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பது பெரிய நோக்கம் அல்ல. மது பாட்டில் பிரச்சனைகளைப் பொறுத்தவரையில் டெட்ரா பேக் வர வேண்டும் என அனைத்துத் தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இதனைச் சிறப்பாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். அதேபோன்று தற்போது 180 மி.லி குறைந்த அளவாக மது பாட்டில்கள் இருக்கும் நிலையில் இனி 90 மி.லி. அளவிற்குக் குறைந்த அளவு பேக்காகக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.