மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என நிதி அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்.10 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை பல்வேறு தனியார் நிறுவனங்களின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தமிழ்நாடு மிக வேகமாக முதலீடுகளை தன்பால் ஈர்க்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
ட்விட்டரில் இதற்கு பின்னூட்டம் இட்ட ஜான் விக் என்பவர் மதுரை இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக முதலீடுகள், தொழில்துறைகள், ஐடி நிறுவனங்கள் போன்றவை அதிக அளவில் தேவைப்படுவதாகவும் இங்குள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக சென்னை, கோவை மற்றும் பெங்களூரு போன்ற இடங்களுக்கு இடம்பெயர்கின்றனர் என்றும் சிப்காட் மற்றும் டைடல் பார்க் போன்ற தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு போதிய இடங்களை ஒதுக்கீடு செய்யாததே மதுரையின் பிரச்சனையாக இருப்பதாக கூறினார்.
இந்த பின்னூட்டத்திற்கு பதில் அளித்த நிதியமைச்சர் இதற்காக பலநாட்களாக பணிசெய்து வருவதாகவும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல செய்தி விரைவில் மதுரைக்கு வர இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இதனிடையே இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.