ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள், கோட்டை ஈஸ்வரன் கோவில் மற்றும் கோட்டை பெருமாள் கோவில். இந்த இரு கோவில்கள் அருகருகே உள்ளது. இந்த இரு கோவில்களின் முகப்பில் இருந்த பழைய கொடிமரங்கள் பழுதானதால் இந்தக் கொடி மரங்களுக்குப் பதிலாக புதிய கொடி மரங்கள் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தனியார் பங்களிப்புடன், ரூபாய் 50 லட்சம் மதிப்பில் கொடிமர உச்சியில், தங்க முலாம் பூசப்பட்டு, இரண்டு தங்கக் கொடிமரம் அமைக்கும் பணி தொடர்ந்து 6 மாத காலமாக நடந்து வந்தது. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையொட்டி, 6 -ஆம் தேதி முதலாக, ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் புதிய தங்கக் கொடிமரம், கோவில் முகப்பில் அமைக்கும் பணி நடந்தது. இந்த நிகழ்வில் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மீண்டும், வருகிற 13 -ஆம் தேதி கோட்டை பெருமாள் கோவிலிலும் புதிய தங்கக் கொடிமரம் அமைக்கப்பட உள்ளது. ஈஸ்வரன் கோவிலின் தங்கக் கொடி மரத்தைப் பக்தர்களும் மக்களும் ஆச்சரியமாகப் பார்த்துச் செல்கிறார்கள்.