அரசு மருத்துவமனையில் காணாமல் போன ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை போலீசார் வித்தியாசமான முறையில் கண்டுபிடித்து உள்ளனர்.
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு சுகாதார மையத்தில் வேலை பார்ப்பவர் உஷா. இவர் தனது பணியை முடித்துவிட்டு ஒரு அறையில் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் காலையில் கண்விழித்துப் பார்த்தபோது தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து எழும்பூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து, விசாரணையைத் தொடங்கிய இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கண்காணித்த போது, சம்பவம் நடந்த அன்று மருத்துவமனைக்குள் யாரும் உள்ளேயும் வரவில்லை, மருத்துவமனையில் இருந்தும் யாரும் வெளியிலும் செல்லவில்லை என்பதை உறுதி செய்தார். மேலும், மருத்துவமனையில் உள்ள யாரோ ஒருவர்தான் இந்தச் சம்பவத்தில் தொடர்பு உடையவராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். நகையை எடுத்தவர்கள் எடுத்த இடத்திலேயே திருப்பி வைக்கச் சொன்னார். ஆனால், நகையைத் திருப்பி வைக்கவில்லை.
இரண்டாவது முயற்சியாக மருத்துவமனையில் இருந்த 11 பேர் மத்தியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இங்கு இருந்த யாரோ ஒருவர்தான் நகையை எடுத்து இருக்கிறீர்கள். எனவே, உங்கள் அனைவரையும் தனித்தனியாக கண்ணைக் கட்டி ஒரு அறையில் விடுகிறோம். நகையை எடுத்தவர் அந்த அறைக்குச் சென்றவுடன் நகையை வைத்து விட்டு வந்து விடுங்கள் என்றார். அதன்படியே அனைவரும் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றனர். அனைவரும் அறைக்குள் சென்று வந்த நிலையில், அங்கு போலீசார் சென்று பார்த்தபோது தங்கச் சங்கிலி கிடந்ததைப் பார்த்துள்ளனர். உடனே நகையை உஷாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர் நகை கிடைத்த மகிழ்ச்சியில் கதறி அழுதபடி போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.