Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு:  'அந்தர்பல்டி' சுவாதி மீது சிபிசிஐடி புதிய வழக்கு!

Published on 02/10/2018 | Edited on 04/10/2018
govt

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி திடீரென்று பிறழ் சாட்சியமானதால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல் சிபிசிஐடி போலீசார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (அக். 1, 2018) மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

 


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா. இவர்களுடைய மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்தார்.


கல்லூரியில் உடன் படித்து வந்த, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதியும் கோகுல்ராஜும் நெருங்கிப் பழகி வந்தனர். கல்லூரி படிப்பு முடிந்த பிறகும் அவர்களின் நட்பு தொடர்ந்து வந்த நிலையில், 23.6.2015ம் தேதியன்று இருவரும் ஒன்றாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டனர்.

 


அன்று இரவு வெகுநேரமாகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், பல இடங்களிலும் விசாரித்தனர். மறுநாள் காலையில் சுவாதியிடமும், மற்றொரு கல்லூரித் தோழர் கார்த்திக்ராஜாவிடம் விசாரித்த கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன் ஆகியோர் கோகுல்ராஜை ஒரு கும்பல் கடத்திச் சென்றிருப்பதை அறிந்தனர். 

 


சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 7 பேர் கும்பல் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தனிமையில் பேசிக்கொண்டிருந்த சுவாதியையும், கோகுல்ராஜையும் மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் கோகுல்ராஜை மட்டும் மிரட்டி காரில் கடத்திச்சென்றுவிட்டதாக போலீசாரிடம் சுவாதி வாக்குமூலம் அளித்து இருந்தார். 24.6.2015ம் தேதி மாலை நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கோகுல்ராஜையும், சுவாதியையும் யுவராஜூம் அவருடைய கூட்டாளிகளும் மிரட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகளை வைத்துதான் போலீசார் யுவராஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் உள்பட 17 பேரை கைது செய்தனர். 


இந்த வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் நடந்து வருகிறது. கடைசியாக கோகுல்ராஜை யார் கடத்திச்சென்றனர் என்பதற்கான ஓரே நேரடி சாட்சி, சுவாதி மட்டும்தான். அவர் இந்த வழக்கில் அரசுத்தரப்பில் நான்காவது சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.


தொடக்கத்தில் இந்த வழக்கை திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்ற விசாரணைமுறை சட்டம் பிரிவு 164ன் கீழ், நாமக்கல் ஜேஎம்&2 நீதிமன்றத்தில் முன்பே சுவாதி சாட்சியம் அளித்திருந்தார். அப்போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜின் கூட்டாளியும் கார் ஓட்டுநருமான அருண் என்பவரை அடையாள அணிவகுப்பின்போது அடையாளம் காட்டியது ஆகிய தகவல்களை வாக்குமூலமாக அளித்திருந்தார். 


இதனால் சாட்சிகள் விசாரணையின்போதும் சுவாதி மீது அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி மற்றும் சிபிசிஐடி போலீசார் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், கடந்த செப்டம்பர் 10, 2018ம் தேதி சாட்சியம் அளிக்க வந்த சுவாதியிடம், சம்பவத்தன்று அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் நீதிமன்றத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.


அதில் வரும் நபர்கள் யாரென்றே தெரியவில்லை என்றும், சம்பவத்தன்று தான் அந்தக் கோயிலுக்குச் செல்லவே இல்லை என்றும் சுவாதி தடாலடியாக கூறினார். 'தன்னுடன் கல்லூரியில் படித்த மாணவன் என்ற அடிப்படையில் மட்டுமே கோகுல்ராஜை தெரியும். கல்லூரிக்குப் பின்னர் அவரை சந்திக்கவில்லை. சிசிடிவி கேமராவில் வரும் காட்சிகளை வைத்து கோகுல்ராஜை அடையாளம் காட்ட இயலாது,' என்றும் கூறினார்.


இதனால் கடும் அதிருப்தி அடைந்த சிபிசிஐடி போலீசார், பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 1, 2018) புதிதாக மனுத்தாக்கல் செய்தனர்.


அந்த மனுவில், ''அர்த்தநாரீஸ்வவரர் கோயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவில் கோகுல்ராஜும், சுவாதியும் 23.6.2015ம் தேதி பேசிக்கொண்டு இருந்தனர். அந்தக் காட்சிகளும், அவர்கள் இருவரையும் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேரும் மிரட்டுவதும், பின்னர் கோகுல்ராஜை மட்டும் தனியாக அந்த கும்பல் அழைத்துச் செல்வதும் பதிவாகி இருக்கிறது. 


வீடியோவில் பதிவாகி இருந்த காட்சிகள் தெளிவாக பார்க்கும் வண்ணம் இருக்கின்றன. ஆனாலும், அந்த வீடியோவில் பதிவாகி இருப்பது தன்னுடைய உருவம் இல்லை என்று சுவாதி மறுத்துவிட்டார். சம்பவத்தன்று மேற்படி கோயிலுக்கே செல்லவில்லை என்றும் சாட்சி விசாரணையின்போது சாட்சியம் அளித்திருக்கிறார். 


ஏற்கனவே ஜே.எம்.2 நீதிமன்றத்தில் சிஆர்பிசி பிரிவு 164ன் கீழ் அளித்த வாக்குமூலத்திற்கு முற்றிலும் முரணாக சாட்சியம் அளித்திருக்கிறார். இது சட்டப்படி குற்றம் ஆகும். பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 193ன் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறப்பட்டு உள்ளது. 


சுவாதி மீதான இந்த மனு மீது தனி வழக்காக விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுவாதிக்கு ஓராண்டு முதல் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்