கோகுல்ராஜ் கொலை வழக்கில் பல்டி சாட்சியம் அளித்த சுவாதி உள்ளிட்ட 7 முக்கிய சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜன. 10) மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் (23). இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார். கடந்த 23.6.2015ம் தேதி அவரைக் காண நாமக்கல்லுக்குச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
மறுநாள் மாலையில், கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்பட்டது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பழகியதால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன.
இந்த வழக்கில், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. எதிரிகள் தரப்பில் யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசுத்தரப்பில் திருச்செங்கோடு டவுன் விஏஓ மணிவண்ணன் நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் சாட்சியம் அளித்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் சதீஸ், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகர், அவருடைய மனைவி ஜோதிமணி உள்ளிட்டோர் போலீசார் கைது செய்யப்பட்டது குறித்தும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் குறித்தும் சாட்சியம் அளித்தார்.
எதிரிகளிடம் இருந்து நான்கு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக விஏஓ மணிவண்ணன் கூறினார். அவற்றில் மூன்று வாகனங்கள் மட்டுமே நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. அவற்றை அவர் அடையாளம் காட்டினார். ஒரு வாகனத்தை போலீசார் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரவில்லை.
இதையடுத்து விஏஓ மணிவண்ணனிடம் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஜன. 11) விசாரணை நடைபெறும் என்று நீதிபதி இளவழகன் அறிவித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இது ஒருபுறம் இருக்க, இந்த வழக்கில் ஏற்கனவே பிறழ் சாட்சியம் அளித்த கோகுல்ராஜின் தோழி சுவாதி, அவருடைய தாயார் செல்வி, யுவராஜூக்கு கார் வாங்கிக் கொடுத்த புரோக்கர் செல்வி என்கிற செல்வரத்தினம், யுவராஜ் வைத்திருந்த காரின் முன்னாள் உரிமையாளர் ரமேஷ்குமார், எஸ்டிடி பூத் அதிபர் பாலகிருஷ்ணன் மற்றும் கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அவருடைய அண்ணன் கலைசெல்வன் ஆகிய 7 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த, அவர்களை திரும்ப அழைக்க க்கோரி சிபிசிஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அரசுத்தரப்பில் பிரபல வழக்கறிஞர் பவானி பா.மோகன் இந்த வழக்கில் ஆஜராகியுள்ள நிலையில், முக்கிய சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட மனுத்தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.