ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு நேற்று முதல் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களை மறைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் இத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பது தொடர்பாக அதிமுக கூட்டணிக் கட்சிகளும் திமுக கூட்டணிக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடைத்தேர்தல் குறித்துப் பேசுகையில், ''அதிமுகவை பொறுத்தவரை யார் வேட்பாளர் என்பதை அதிமுக பொதுச் செயலாளர் முடிவு செய்வார். குறிப்பாக அதிமுக கூட்டணி என்பது ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாகை சூடும் என்பதில் எந்த அச்சமும் இல்லை. காலம் சூழ்நிலைகள் மாறி இருக்கிறது. வெற்றி என்ற இலக்கை நாங்கள் எட்டப் போகிறோம். இதுதான் தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கப் போகிறது''என்றார்.
திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.