சேலத்தில் ஆடிப்பண்டிகையின் ஒரு பகுதியாக நடந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதிகாச, வரலாற்று நிகழ்வுகளை சித்தரித்தும், கடவுளர்கள் வேடம் அணிந்தும் உலா வந்த பக்தர்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தனர்.
சேலத்தில் ஆடி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் குகை, செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படுவது காலங்காலமாக இருந்து வருகிறது.
நேற்று சேலம் குகை பகுதியில் காளியம்மன், மாரியம்மன் கோயில் பண்டிகையையொட்டி 113வது ஆண்டாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 9, 2018) நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் பக்தர்கள் புராண, இதிகாச, வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில் பல்வேறு வேடமணிந்து உலா வந்தனர்.
கடவுள் விஷ்ணு, தர்மத்தை நிலைநாட்ட வாமன அவதாரம் எடுத்தார். அவர் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி நிலம் கேட்டார். புராணத்தில் சொல்லப்படும் இந்த காட்சியை சித்தரிக்கும் வகையில், பக்தர்கள் வாமனன், மகாபலி சக்கரவர்த்தி, முனிவர் வேடமணிந்து உலா வந்தனர். குகை ஆண்டிசெட்டி தெரு வண்டி வேடிக்கைக்குழுவினர் இந்தக் காட்சியை வடிவமைத்து இருந்தனர்.
பரம ஏழையான குசேலர், வறுமையால் வாட, அவருடைய பிள்ளைகளோ கடும் பசியால் வாடினர். இதனால் மனம் பொறுக்காத அவருடைய மனைவி, செல்வச்சீமானான குசேலரின் நண்பரான ஸ்ரீகிருஷ்ணரை நேரில் சந்தித்து பொருளுதவி பெற்று வரும்படி வற்புறுத்தினாள். கந்தல் ஆடையுடன் கிருஷ்ணரை சந்தித்த குசேலன், அதன்பின் வறுமை நீங்கி பெரும் செல்வந்தன் ஆனதாக புராணங்களில் சொல்லப்படுகிறது.
இந்தக் காட்சியை சித்தரிக்கும் வகையில், குசேலர், கிருஷ்ணர், ருக்குமணி ஆகிய கடவுளர்கள் வேடமணிந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். அம்பலவாணர் கோயில் சாமி தெரு நண்பர்கள் கு-ழுவினர் இந்த வண்டியை அலங்கரித்து இருந்தனர்.
ஜீக்கா பக்கா நண்பர்கள் குழுவினர், நரசிம்ம அவதாரத்தை சித்தரிக்கும் வகையில் நரசிம்மர், பிரத்யங்கராதேவி, சிவன் வேடங்களில் உலா வந்தனர். தத்ரூபமாக அமைந்த இந்தக் காட்சியை பக்தர்கள் வெகுவாக ரசித்தனர்.
சிறந்த அலங்காரம், காட்சி அமைப்புகளுடன் உலா வந்த வண்டிவேடிக்கைக்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. வண்டிவேடிக்கை நிகழ்ச்சியையொட்டி காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.