Skip to main content

ஆடு திருடியபோது விபத்தில் ஒருவர் பலி; திருட்டை மறைக்க நாடகம் ஆடியது அம்பலம்!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

Goat thieves who convinced the public

 

சீர்காழி அருகே, இரு சக்கர வாகனத்தில் ஆடு திருடி வந்தபோது, வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயத்தோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சுனாமி நகரில் வசித்து வருபவர் சுரேஷ் 30. கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பாண்டித்துரை, அரவிந்த் உள்ளிட்ட 3 பேருடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று பக்கத்து கிராமமான பழையாரில் ஆடு திருடி, இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்துள்ளனர். அப்போது ஆடு திமிற டூவிலர் கட்டுப்பாட்டை இழந்து கூழையார் கடலோர பிரதான சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்தனர். 

 

இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செய்வதறியாது யோசித்த மற்ற இருவரும் ஆடு திருடிய சம்பவத்தை மறைக்க சுரேஷின் உடலை இரவோடு இரவாக சுரேஷின் வீட்டு வாசலில் கொண்டுவந்து போட்டுவிட்டு, காயத்தோடு இருந்த இருவரும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வந்து, டூவிலர் விபத்து எனக் கூறி சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். 

 

இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, ஆடு திருடியதை மறைக்கவே, விபத்தில் இறந்தவர், கொலைசெய்யப்பட்டார் என நாடகமாடியது அம்பலமாகியது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்