புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் கடந்த சில வருடங்களாக ஆடுகள் திருட்டு அதிகரித்துவருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, கிடைகளில் நிற்கும் ஆடுகளை மொத்தமாக திருடிச் சென்ற காலம் மாறி, வீட்டுக்கு வீடு ஒவ்வொரு ஆடாக திருடுவது அதிகரித்துள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு ஊர் அமைதியான பிறகு மோட்டார் சைக்கிள், ஆம்னி கார், டாடா ஏசிஇ போன்ற வாகனங்களில் வரும் திருடர்கள், ஆடுகளைத் தூக்கிக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், மேற்பனைக்காடு, வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி உள்பட பல கிராமங்களிலும் தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில் மணக்காடு, சித்தாதிக்காடு உள்பட பல கிராமங்களிலும் சில மாதங்களில் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்ட நிலையில், கீரமங்கலத்தில் இரு ஆடு திருடர்களோடு 2 ஆடுகள், 2 மோட்டார் சைக்கிள்களையும் பிடித்துக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அதேபோல கடந்த வாரம் பேராவூரணி அருகே சித்தாதிக்காட்டில் இரு ஆடு திருடர்களைப் பிடித்துக்கொடுத்தனர். அதன் பிறகும் திருட்டுகள் குறையவில்லை. இவர்களின் நெட்ஒர்க் பற்றி சொல்லியும் கூட காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிடிபட்ட இடத்தில் மேலும் சிலர் தங்கள் கும்பலில் இருப்பதாகவும் கூகுள் மேப் வைத்து தப்பிச் செல்வோம் என்று கூறியுள்ளனர். அந்த மேலும் சிலர் பற்றி புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் தகவல் பெற்றும் கூட விசாரணை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான், திருவோணம் அருகே சிவவிடுதி கிராமத்தில் நள்ளிரவில் ஆடு திருடவந்த ஒரு கும்பலை பொதுமக்களே விரட்டிப் பிடிக்க முயன்றபோது பேராவூரணியைச் சேர்ந்த வீரமணி என்ற இளைஞர் மட்டும் சிக்கியுள்ளார். இவர் மீது ஏற்கனவே ஆடுகள் திருட்டு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து ஆடுகளைப் பறிகொடுத்த கிராம மக்கள் பிடிபட்ட திருடனை மரத்தில் கட்டிவைத்து விசாரித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பொதுமக்கள் பிடித்துக்கொடுத்த இந்த திருடன் மூலமாக தப்பிச் சென்ற மற்ற திருடர்களைப் பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால் ஆடுகளைப் பறிகொடுத்த விவசாயிகள் நிம்மதியாக இருப்பார்கள்.