திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பான சார் ஆட்சியரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை கடந்த 3 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில் வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்நிகழ்வு தொடர்பாக ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட கடந்த 04 ஆம் தேதி கடிதத்தின் மூலம் அரசிற்கு பரிந்துரை செய்திருந்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையை ஏற்று திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீதும் மற்ற காவல்துறையினர் மீதும் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ள அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையைத் துவங்கியுள்ளார். தற்பொழுது இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் 326-ல் பல்வீர் சிங் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.