Skip to main content

தமிழகத்தில் அமைச்சரவை இருக்கின்றதா? இல்லையா?-திருநாவுக்கரசு

Published on 24/05/2018 | Edited on 25/05/2018

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் வலுத்துவருகின்ற நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்,  

 

thiru

 

 

சமீப கால தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வற்புறுத்தி அமைதியான போராட்டத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து நூறு நாட்களாக நடத்திவந்த நிலையில். நூறாவது நாளில்  காவல்துறையின் மூலம் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தை முன்கூட்டியே அறிவித்துவிட்டு மக்கள் நடத்திய நிலையில் போராட்டம் நடத்துபவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி முன்னெச்சரிக்கையோடு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் கூட்டத்தினர் மீது எந்த வரம்பும் பின்பற்றாமல் கண்டபடி துப்பாக்கி சூடு நடத்தியது அரசின் பாசிச போக்கையே காட்டுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆகவேண்டும்.

 

மக்கள் போராட்டங்களை போலீஸ் கெடுபிடியாலோ, கண்ணீர் புகை, பிரம்படி, துப்பாக்கி சூடு, வழக்கு, கைது, ஆகியவற்றால் அரசு தடுத்து நிறுத்த முயற்சிப்பது சர்வாதிகார போக்காகும். ஐம்பதிற்கும் மேற்பட்டோர் அடிபட்டும் துப்பாக்கிச்சூட்டில் குண்டு காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர். பதிமூன்றுபேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவோ, பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்கவோ, அமைதி குழுக்கள் அமைக்கவோ, மக்களுக்கு ஆறுதல் சொல்லவோ, முதலமைச்சரோ மற்ற அமைச்சர்களோ தூத்துக்குடிக்கு செல்லாமல் சென்னையிலையே முகாமிட்டிருப்பது அரசின் முற்றிலும் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.

 

 

தமிழக அமைச்சரவை இருக்கின்றதா? அரசு செயல்படுகிறதா? என்கிற ஐய்யப்பாடு வருமளவிற்கு எடப்பாடி பழனிசாமி அரசு செயலற்று கிடக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் சொல்ல சென்ற தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்திருப்பது கேலிக்கூத்தாக அமைந்திருக்கிறது. தமிழக அரசின் இத்தகைய மக்கள் விரோத போக்கையும்,ஜனநாயக விரோத போக்கையும், சர்வாதிகார நடவடிக்கைகளையும் கண்டித்து நாளை (25.05.2018) தமிழ்நாடு முழுவதும் முழு பந்த் (கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்தம்) செய்வதென காங்கிரஸ், தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளும் வியாபார அமைப்புகளும் முடிவு செய்துள்ளோம். இந்த முழு அடைப்பிற்கு பொது மக்களும் வியாபாரிகளும் மற்றும் அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு தரவேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்