சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வழிபடச் சென்ற பெண்ணிடம் தகராறு செய்த தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் கோவில் தீட்சிதரை தாக்கியதாக தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டும் தீட்சிதர்களை கைது செய்யாததை கண்டித்து வெள்ளிக்கிழமை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பெரியார் திராவிட கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட 10 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். மேலும் வரும் 23-ஆம் தேதி கோவிலில் வழிபடச் சென்ற பெண்ணை சாதி பெயரை கூறி கேவலப்படுத்தி தாக்கிய தீட்சிதர்களை கண்டித்து சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், வரும் மார்ச் 2-ஆம் தேதி நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் எனவும் கோவிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.