திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெரும் புகழ்பெற்றது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருகை தருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயில் சார்பில் சரியான தங்கும் விடுதியில்லாமல் இருந்தது. இதுபற்றி அரசுக்குப் பலமுறை கோரிக்கை அனுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஜீன் மாதம் ஈசான்யம் பகுதியில் பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரிகள் நிவாஸ்) கட்ட முடிவு செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஜீன் மாதம் பணிகள் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 28 கோடி ரூபாய் செலவில் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த யாத்ரி நிவாஸ், குடும்பத்துடன் தங்குவதற்கான அறைகள், தனிநபர்கள் தங்கும் அறைகள், தூங்கும் பெரிய அறைகள் என மூன்று அடுக்கு கொண்ட கட்டிடமாக உள்ளது. இதில் 24 காட்டேஜ்கள், 63 தனிநபர் தங்கும் அறைகள், 36 பெரிய அறைகள் என 123 அறைகள் உள்ளன. இதில் ஏசி அறைகளும் அடக்கம்.
இங்கு வாகன ஓட்டுநர்கள் தங்குவதற்கான வசதி, பொதுக்கழிப்பிடம், பூங்கா, உணவு விடுதி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தன. கரோனாவால் திறக்கவில்லை எனக் கூறி வந்தார்கள்.
இந்நிலையில், பிப்ரவரி 26ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி, வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் திறந்துவைத்தார். தேர்தல் தேதிக்கு முன்பு திறந்துவைக்க வேண்டும் என்றே திடீரென அவசரம் அவசரமாக திறந்துவைத்திருக்கிறார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.