நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை
மீண்டும் வழங்குக; மாதர்சங்க மாநாடு வலியுறுத்தல்
புதுக்கோட்டை, ஆக.18- அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகைகளை மீண்டும் வழங்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.
ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் புதுக்கோட்டை எஸ்விஎஸ் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.சுசீலா தலைமை வகித்தார். மாநாட்டுக்கொடியை உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் என்.கண்ணம்மாள் ஏற்றிவைத்தார். எஸ்.பாண்டிச்செல்வி அஞ்சலித் தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் சந்திரா ரவீந்திரன் வரவேற்றார்.
மாநாட்டை தொடங்கி வைத்து மாநில துணைத் தலைவர் ஜி.கலைச்செல்வி பேசினார். தமுஎகச மாநில துணைத் தலைவர் ஆர்.நீலா, உணவக உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் சண்முக பழனியப்பன் ஆகியோர் வாழ்;த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் டி.சலோமி வேலை அறிக்கை வாசித்தார். எஸ்.சரோஜா வரவு-செலவு அறிக்கை வாசித்தார். மத்தியக்குழு உறுப்பினர் என்.அமிர்தம் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவராக பி.சுசீலா, செயலாளராக டி.சலோமி, பொருளாளராக எஸ்.பாண்டிச்செல்வி, துணைத் தலைவராக எம்.பவானி, துணைச் செயலாளராக சுமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டையில் உள்ள அரசு டாக்டர் முத்துலெட்சுமி மருத்துவமனை அதே இடத்தில் தொடர்ந்து இயங்க சுகாதாரத்துறையும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகைகளை மீண்டும் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் இலவச கழிப்பறை கட்டித்தர வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பகத்சிங்