திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. சென்னை உள்ளிட்ட வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களாளேயே கரோனா தொற்று அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனை கொள்கின்றனர்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நோய் தொற்றின் தாக்கம் அதிகரிப்பதால் அங்கு வேலைக்குச் சென்றவர்கள் அனைவரும் அரசுக்கு தெரிந்தும், தெரியாமலும் தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அப்படி வருபவர்களில் பலருக்கும் நோய் தொற்று இருப்பதால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் நோய் பரவுவது அதிகரித்துள்ளது. அதனால் கிராமங்களில் நோய்தொற்று சற்று வேகமெடுக்கவே செய்துள்ளது. வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மூலமாக அவர்களுடைய குடும்பத்தினரோடு மட்டுமின்றி, அந்த கிராமமே பாதிக்கப்படுகிறது.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களை இனம் கண்டு அவர்களுக்கு கரோனா பாதிப்பு இருக்கிறதா என கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. இதில் 108 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் அருகே வடகண்டம் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்த நிலையில், அவருக்கு கரோனா உறுதியானது. அவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறார். அதேபோல திருவாரூர் மாவட்டம் காரைக்கோட்டை பகுதியை சேர்ந்த 32 வயது பெண் மற்றும் அவருடைய மூன்று மாத ஆண் குழந்தைக்கும் கரோனா தொற்று உறுதியானது. இருவரும் சென்னை சென்று வந்ததால் நோய்தொற்று உறுதியாகியுள்ளது. திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி சென்னை சென்று வந்துள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் அவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 12 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பர் கிராமத்தை சேர்ந்த கர்பிணி பெண் ஒருவருக்கு, எதிர்வீட்டில் இருந்தவர்கள் மூலம் கரோனா பரவியது. அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவருக்கு சுகப்பிரசவமாக ஆண்குழந்தை பிறந்துள்ளது. தாய்க்கும், சேய்க்கும் தனி தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.