புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் வடக்களூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஞானசேகரன் மகள் சுதா (14) என்ற சிறுமி தனது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரிடம் ஓமன் நாட்டில் தவிக்கும் தன் தாயை மீட்டுத் தாருங்கள் என்று கண்ணீரோடு மனு ஒன்றை கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.
அவரிடம் விவரம் கேட்டபோது, ‘’ எங்க அப்பா அம்மா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். வறுமை அதிகமாக இருந்ததால் என் தாய் ஜெயலெட்சுமி என்னை படிக்க வைக்கவும் எனக்காக பொருள் சேர்க்கவுமாக கூலி வேலைக்கு சென்றார். அப்போது ஒரு புரோக்கர் ஓமன் நாட்டுக்கு வீட்டு வேலைக்கு போனால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொன்னதால் கடந்த பிப்ரவரி மாதம் என்னை என் பாட்டி வீட்டில் தங்க வைத்துவிட்டு ஓமன் நாட்டுக்கு போனார்.
போன இடத்தில் எங்க அம்மாவின் முதலாளி வேலை அதிகம் கொடுப்பதுடன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல வகையில் தொல்லை கொடுத்து வருவதாக சொல்லி அழுகிறார். சில நேரங்களில் கொன்றுவிடுவார்களோ என்றும் அச்சப்படுகிறார். என் அம்மா மட்டும் தான் எனக்காக இருக்கிறார். அவரும் இல்லை என்றால் நான் அனாதை யாக்கப்படுவேன். அதனால எங்க அம்மாவை மீட்டுத் தாருங்கள் என்று மனு கொடுத்திருக்கிறேன். எங்க அம்மா வரலன்னா என் நிலையும் ஆபத்தானது தான் என்றார் கண்ணீர் மல்க.
ஆட்சியரும் அரசாங்கமும் துரித நடவடிக்கை எடுத்தால் ஒரு தாயை மீட்டு மகளின் கண்ணீரை துடைக்கலாம்.