திருவண்ணாமலை நகரில் பெண்கள் சாதனை கண்காட்சி தொடக்க விழா ஜனவரி 23ந்தேதி, திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கண்ணை கட்டிக்கொண்டு ஒரு மாணவி சைக்கிள் ஓட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியரை அந்த மண்டபத்துக்கு அழைத்து சென்றது வித்தியாசமாக, பரபரப்பாக பேசப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றியம், முனுகப்பட்டு கிராமத்தில் பட்டு கைத்தறி நெசவுத் தொழில் செய்து வருகிறார் ஏழை நெசவாளர் குமரன். இவரது மனைவி அனிதா, இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். 12 வயது சுருதி, 9 வயதில் காஞ்சனா என உள்ளனர். குமரனின் இரண்டு மகள்களும் முனுகப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே 6-ம் வகுப்பும், 3-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இதில் மாணவி சுருதி தனக்கேன்று தனித் திறமை ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வளர்த்துக் கொண்டுள்ளார். அதாவது சுருதியால் தனது இரண்டு கண்களையும் கட்டிக் கொண்டு மிதிவண்டி ஓட்டுவது, வரை படத்திற்கு வண்ணம் தீட்டுவது, நிறங்களை கூறுவது, சதுரங்கம், கியூப் விளையாடுவது, உருவங்களை அடையாளம் காண்பது, பின்தொடர்வது, உட்பட பல்வேறு தனித் திறன்களை பெற்றுள்ளார்.
மாணவியின் இந்த திறமைகளை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார். அவரது திறமைகள் கண்டு பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாணவி சுருதி தனது இரண்டு கண்களையும் கட்டிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்களுடன் பெண்கள் சாதனை நிகழ்ச்சி நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும் ஒரு மதிவண்டி என்கிற சைக்கிளில் சென்றார். சுமார் 1 கி.மீ தூரம் அந்த மாணவி கண்ணைக்கட்டிக்கொண்டு வாகனங்கள் அதிக பயணமாகும் சாலையில் பயணம் செய்தார். அந்த நிகழ்ச்சி நடைபெறும் மண்டபம் வரை சென்றார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் அமலராக்கினி பார்வையற்ற பள்ளியை சேர்ந்த பெண்களின் கைப்பந்து போட்டியை பார்வையிட்டார். அதேபோல், திருவண்ணாமலையை சேர்ந்த 2½ வயது குழந்தை லக்ஷனா தனது தாயார் கேட்ட திருக்குறள், தலைவர்கள் பெயர், திருப்பாவை, ஸ்லோகம் ஆகியவற்றினை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சிறப்பாக எடுத்துரைத்து அனைவரது கவனத்தையும் ஈத்தார்.
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசும்போது, பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட அளவில் பெண்களின் சாதனைகள் காட்சி படுத்துவதற்கு வாய்ப்பு தருவதற்கு இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இத்திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக கடந்து ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் பல்வேறு சாதனைகள் வெளிக்கொண்டு வருவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. வாழ்க்கையில் படிப்பு மட்டும் சாதனை கிடையாது, பல்வேறு தனித் திறன்கள் கொண்ட பெண்களுக்கு படிப்புடன் அவர்களின் திறமைகளும் சாதனை தான்.
வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் அனைத்து சாதனைகளும் நிகழ்த்தலாம். நம் எண்ணங்களை வெளியில் கொண்டு வரவேண்டும். தினமும் காலையில் எழுந்து இன்று என்ன செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டால் உங்கள் இலட்சியத்தை அடையலாம். வாழ்க்கையில் ஏற்படும் தடைகற்களை உடைத்து சாதிக்க வேண்டும். வாய்ப்புகளை இழந்துவிட்டால் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காது. வாய்ப்புகள் வரும் போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் திறமை, ஆற்றல் வெளிக்கொண்டு வந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். மற்றவர்கள் வாழ்க்கையுடன் உங்களை ஒப்பிட்டு பார்கக்கூடாது. ஒவ்வொரு விஷயத்தையும் உள்வாங்கி விரும்பி, விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி கிடைக்கும்’ என்றார்.