கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஆசனூர். இந்தப் பகுதியில் உள்ள காட்டுக்கொட்டாயில் வசித்து வருகிறார் பழனியாப்பிள்ளை. இவரது மகள் 20 வயது பிரேமா, பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து குடும்பத்தினருடன் விவசாய வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று (11.05.2021) காலை வீட்டின் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார் பிரேமா. அப்போது முகமூடி அணிந்துகொண்ட இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பிரேமாவின் அருகில் சென்று நின்றுள்ளனர்.
அவர்கள் திடீரென்று பிரேமா என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் அவரை தலை மற்றும் முகத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு, சில நொடிகளில் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் மாயமாய் சென்றுவிட்டனர். சில வினாடிகளில் நடந்த இந்த சம்பவத்தை அக்கம்பக்கம் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் பதறி அடித்து ஓடிச் சென்று, வெட்டப்பட்டுக் கிடந்த பிரேமாவை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரேமாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய நபர்கள் குறித்து வழக்குப் பதிவுசெய்த உளுந்தூர்பேட்டை போலீசார், டிஎஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரேமா அடிக்கடி சின்ன சேலம் அருகிலுள்ள அம்மை அகரம் கிராமத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று வந்துள்ளார். அப்போது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் நடராஜன் என்பவரது மகன் பாலா வயது 30 என்பவர் காதலிப்பதாக கூறி, அடிக்கடி பாலா பிரேமாவை சந்தித்து தொந்தரவு செய்துள்ளார். இதையறிந்த பிரேமாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரேமாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று காலை முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் பிரேமாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தப்பிச் சென்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பிரேமா நேற்று மாலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு, கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரேமாவின் தந்தை பழனி ஊருக்கு அருகிலுள்ள தனக்கு சொந்தமான வயல் பகுதியில் காட்டுக்கொட்டாய் அமைத்து அங்கேயே குடும்பத்தினருடன் தங்கிக்கொண்டு வயல் வேலைகளை செய்துவந்துள்ளார். இதனால் பிரேமாவை கொலை செய்ய வந்தவர்கள், அக்கம்பக்கம் வீடுகள் இல்லாமல் தனிவீடாக இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு பிரேமாவின் வீட்டிற்கு துணிவோடு வந்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி கொலை சம்பவத்தில் தனிப்படை போலீசார் 46 வயது கலியமூர்த்தி என்பவரை கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பிரேமாவின் தந்தை பழனிக்குச் சொந்தமான எட்டு ஏக்கர் நிலத்தை கலியமூர்த்தி குத்தகைக்கு எடுத்து விவசாய பயிர் செய்து வருகிறார். இதற்காக அவர் பிரேமாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால் அவர்கள் குடும்பத்தினருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்ட கலியமூர்த்தி, அவ்வப்போது பிரேமா தனிமையில் இருக்கும்போது தகாத உறவுமுறையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து பிரேமா அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரேமாவை முகமூடி மனிதர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறியதையடுத்து, தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அதில் பிரேமா கொலை செய்யப்பட்ட பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்ஃபோன் உரையாடலைப் போலீசார் ஆய்வுசெய்தனர். அதன் அடிப்படையில் கலியமூர்த்தியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கலியமூர்த்தி பிரேமாவை தான் அவ்வப்போது பாலியல் சில்மிஷம் செய்து வந்ததாகவும், சம்பவத்தன்று அவர் தனியாக வயல்வெளி பக்கம் நடந்துவந்தபோது அவரை பாலியல் தொந்தரவு கொடுக்க முற்பட்டேன், கட்டாயப்படுத்தினேன். அதனால் அவர் கத்தி சத்தம் போட்டார். இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரிந்துவிடும் என்று பயந்தேன். எனவே பிரேமாவை உயிரோடு விட்டுவைத்தால் அவர் நம்மை காட்டிக்கொடுத்துவிடுவார் என்று அருகில் கிடந்த தடியை எடுத்து பிரேமாவின் தலையில் தாக்கி அவரை கொலை செய்தேன் என்று கலியமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கலியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.
20 வயது இளம்பெண்ணை பாலியல் வக்கிர புத்தி காரணமாக கொலை செய்த 46 வயது கலியமூர்த்தியின் செயல் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் பரபரப்பான தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தபோதிலும் இளம்பெண் பிரேமாவின் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை சில தினங்களிலேயே அடையாளம் கண்டு கைது செய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.