சென்னையை சேர்ந்த சங்கீதா மகள் மம்தாஸ்ரீ(7). இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை காரணமாக சங்கீதா தனது மகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீடான, காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வடமூர் கிராமத்திற்கு வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் வியாழக்கிழமை(16.5.2024) மதியம் அப்பகுதியில் உள்ள ஊர் பொதுக்குளத்தின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுமிகளுடன் மம்தா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது தண்ணீரில் இறங்கி விளையாடிய போது திடீரென குளத்து படியின் உள்ளே கால் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.
உடன் விளையாடிய சிறுமிகள் ஓடிச் சென்று மம்தா ஸ்ரீ உறவினர் ராஜாகுமாரியிடம், தெரிவித்ததையடுத்து உறவினர் மற்றும் ஊர் மக்கள் அவறியடித்து ஓடி சென்று தண்ணீரில் உள்ள மூழ்கிய சிறுமியை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு வந்த சிறுமி குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சிதம்பரம் தாலுக்கா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.