சேலம் அருகே, பள்ளிச் சிறுமியை கடத்திச்சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஏப். 25ம் தேதி காலை, அப்பகுதியில் உள்ள மருந்து கடைக்கு தனியாக சென்று கொண்டிருந்தார். வீட்டுப் பக்கத்தில் உள்ள மளிகைக் கடையில் வேலை செய்து வந்த வினித் என்கிற வினோத் (23), சிறுமியிடம் அவளுடைய தந்தை அழைத்ததாகச் சொல்லி தனது மோட்டார் சைக்களில் தேக்கம்பட்டி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வினித், உடன் இருந்த தன் நண்பர்களுக்கும் சிறுமியை இரையாக்கினார். மருந்து கடைக்குச் சென்ற மகள் இரவாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். இரவு 9 மணியளவில் சிறுமி தானாகவே வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார். மறுநாள் ஏப். 26ம் தேதி காலையில் வெளியே சென்ற சிறுமி அன்றும் இரவு நேரத்தில்தான் வீடு திரும்பினார்.
வீட்டுக்கு வந்தபோது மிகவும் சோர்வாக இருந்ததால், சிறுமியிடம் அவருடைய தந்தையும், அத்தையும் விசாரித்துள்ளனர். அப்போதுதான் அவரை, வினித்தும் அவனது கூட்டாளிகளும் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கதறி அழுதபடியே கூறியிருக்கிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில், சூரமங்கலம் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சிறுமியை கூட்டாக சேர்ந்து வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த வினித், தேக்கம்பட்டி விக்னேஷ் (21), ஆகாஷ் (19), சீனிவாசன் (23), அருள்குமார் (23), கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மொன்னையன் என்கிற துரைசாமி (22), கூழை பிரபு என்கிற பிரபு (24) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்களில் வினித்தும், விக்னேஷூம் அண்ணன், தம்பிகள் ஆவர். பாலியல் வன்கொடுமை விவகாரத்தை வெளியே சொன்னால் சிறுமியையும், அவருடைய தந்தையையும் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். கைதான 7 பேரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க, மொன்னையன் என்கிற துரைசாமி, கூழை பிரபு என்கிற பிரபு ஆகியோர் மீது வேறு சில குற்ற வழக்குகளும் இருப்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும், கிச்சிப்பாளையம் கோவிந்த காடு தோட்டம் காட்டு வலவு பகுதியைச் சேர்ந்த சின்னவர் என்பவரை கடந்த ஏப். 2ம் தேதி வழிமறித்து அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றுள்ளனர்.
அதேநாளில் இவர்கள் இருவரும், ரமே என்பவரிடம் கத்தி முனையில் 4000 ரூபாயை வழிப்பறியும் செய்துள்ளனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக கிச்சிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்துள்ளனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் 7 பேரும் மேலும் பல குற்றங்களில் ஈடுபடக்கூடும் என்பதோடு, பொது அமைதியை சீர்குலைக்கும் குற்றங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 7 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் லாவண்யா, கவுதம் கோயல் ஆகியோர் ஆணையருக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் காவல்துறை ஆணையர் விஜயகுமாரி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வினித் உள்ளிட்ட 7 பேரையும் ஒரே நாளில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஒரே நாளில் 7 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக விரோத கும்பல் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.