அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 13 வயது சிறுமி ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த அந்த சிறுமிக்கு அவ்வப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சில ஆண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லியுள்ளார்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி சிறுமியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஏற்கனவே செந்துறை பகுதியைச் சேர்ந்த தனவேல், பாலச்சந்தர், வினோத் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் மேலும் சிலர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை விசாரணையின் மூலம் கண்டறிந்த போலீஸார் அவர்களையும் அவர்களுக்குத் துணையாக இருந்த மூன்று பெண்களையும் கைது செய்துள்ளனர். அதில் சம்பந்தப்பட்ட பெண்கள் சாந்தா, சந்திரா, இந்திரா, ஆண்களில் பிரேம், வெற்றி கண்ணன், மனோஜ், தெய்வீகன், குமார் ஆகியோரை கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளார். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 11 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.