‘பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர்’ என்கிறது திருக்குறள். இதை அறியாதவர்களும் இருக்கிறார்கள். ஆம். சிவகாசி அருகிலுள்ள லட்சுமியாபுரத்தில் ரயில் தண்டவாளம் அருகில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை பையில் போட்டுச் சென்றுவிட்டனர்.
அவ்வழியே போனவர்கள் அழுகுரல் கேட்டுச் சென்று குழந்தையைப் பார்த்தவுடன், சிவகாசி டவுண் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு கிடந்த குழந்தை மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அரசு மருத்துவர்கள் அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்த விசாரணை நடைபெறுகிறது.
சிவகாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் “பெண்ணென்றால் பேயும் இரங்கும்னு சொல்லுவாங்க. இந்த பொம்பளப் புள்ளய பெத்தவளும் ஒரு பெண்தானே? தூக்கிவீச எப்படித்தான் மனசு வந்துச்சோ? பேயைக் காட்டிலும் மோசமானவங்களா இருக்காங்க.” என்று நொந்துபோய்ச் சொன்னார்.
குழந்தை பாக்கியம் இல்லாமல் எத்தனையோ தம்பதியர் பரிதவித்து வருகின்றனர்.
அதனால், கருத்தரிப்பு மையங்கள் எங்கெங்கும் வியாபித்துவிட்டன. இன்னொருபுறம், ‘தேவை ஒரு குழந்தை’ என ஏங்குபவர்களிடம், அரசு மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளைத் திருடி விற்கும் கும்பலும் மலிந்திருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், பிறந்த குழந்தையை எங்கோ போட்டுவிட்டுச் செல்லும் கல்நெஞ்சம் கொண்டவர்களும் நம்மிடையே இருப்பது கொடுமைதான்!