மேட்டூர் அருகே ஆர்எஸ் பகுதியில் பழமைவாய்ந்த ராட்சத வேப்ப மரம் ஒன்று சாலையில் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.
மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மலையில் பலத்த காற்றுடன் கோடை மழை பொழிந்து வருகிறது. சேலம் பேருந்து நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு 17 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பெரியசாமி என்பவர் பேருந்தை இயக்கி வந்தார். அப்பொழுது ஆர்.எஸ். பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது 50 ஆண்டுகள் பழமையான ராட்சத வெப்ப மரம் விழுந்துள்ளது. இதில் பயணிகள் உட்பட சாலையில் சென்ற யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படாமல் தப்பினர்.
இந்த விபத்தில் மின் கம்பி மேல் மரம் சாய்ந்ததால் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தத் தீயணைப்பு படையினர் பேருந்து மீது விழுந்த மரத்தை அகற்றி வருகின்றனர். இதனால் சேலம்-மேட்டூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆர்.எஸ், கருமலைகூடல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மின்சார சேவை இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.