Skip to main content

ஆளுநரை திரும்ப பெறுக... திருமாவளவன் வலியுறுத்தல்!

Published on 11/09/2021 | Edited on 13/09/2021

 

 

தமிழகத்தின் புதிய ஆளுநராகக் கடந்த 9 ஆம் தேதி ஆர்.என்.ரவி பதவி நியமனம் செய்யப்பட்டார். நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாவார். ஆர்.என்.ரவியின் முழு பெயர் ரவீந்திர நாராயண ரவி. 1976ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்ற  ஆர்.என். ரவி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். பல்வேறு மத்திய அரசுப் பணிகளிலும், மாநில அரசுப் பணிகளிலும் பணியாற்றியவர். அதேபோல் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

 

தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்பதற்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 'தங்களைத் தமிழ்நாடு வரவேற்கிறது' என அவரது வாழ்த்தைச் சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது பாஜகவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும், 'சீரிய முயற்சியால் நாகாலாந்து அமைதி நிலவச் செய்து உங்கள் சாதனை மகுடத்தில் மணிக்கல்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் ''தமிழ்நாடு ஆளுநராக தற்போது நியமிக்கப்பட்டிருப்பவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். ஜனநாயகப்பூர்வமாகச் செயல்படும் ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்