மாப்பிள்ளை சம்பா அரிசிக்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்து இருக்கிறார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் இருக்கும் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் இரண்டு நாள் தேசிய நெல் திருவிழாவின் நிறைவு விழா நடைபெற்றது. நெல் பாதுகாப்பு மைய உயர் மாவட்ட குழு தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். விழாவில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், “இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச்செல்லும் நோக்கத்தோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் இயற்கை விவசாயத்திற்கு 400 கோடி நிதியை தமிழக முதல்வர் ஒதுக்கினார். இன்று இயற்கை விவசாயத்தை மக்கள் நாடுகிறார்கள். நெல் பாரம்பரியத்தை காத்த நம்மாழ்வார். நெல் ஜெயராமன் மறைந்தாலும் இந்த உலகம் இருக்கும் வரை அவர்கள் பெயர் மறையாது. அப்படி பாதுகாத்த நெல் ரகங்களை பரவலாக்க விவசாயிகளுக்கு தலா 2 கிலோ வழங்கி பரவலாக்கி வருகிறார்கள்.
எப்போதும் ஜூன் இரண்டாம் தேதி தான் மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு வரும் 24ஆம் தேதி முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் முன்கூட்டியே அறுவடை பணிகள் நடந்து மழை பாதிப்பு இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நெல் ஜெயராமன் பாதுகாத்த மாப்பிள்ளை சம்பா பலகோடி வருமானம் பெரும் மதிப்பு வாய்ந்த ஒன்றாக சந்தையில் மாறி இருக்கிறது.
பாரம்பரியமிக்க தனித்துவமான ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் அடையாளம்தான் புவிசார் குறியீடு. இது பொருளுக்கு நம்பகத் தன்மை குறிக்கிறது. சேலம் மாம்பழம், பழனி பஞ்சாமிர்தம், திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் மாப்பிள்ளை சம்பாவுக்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கு முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மாப்பிள்ளை சம்பா நம்மை தவிர வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இதனால் உலக அளவில் மாப்பிள்ளை சம்பா ஏற்றுமதி நடைபெறும்” என்று கூறினார்.
இந்த விழாவில் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.