Skip to main content

மூடாமல் புதிது புதிதாக திறப்பதா?-பாமக ராமதாஸ் கடும் கண்டனம்!

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

pmk

 

திருச்சி - சிதம்பரம் இடையே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சுங்கச்சாவடி திறக்கப்பட்டிருப்பதும், மேலும் ஒரு சுங்கச்சாவடி நாளை மறுநாள் திறக்கப்படவுள்ளதும் அதிர்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவிலேயே அதிக சுங்கச்சாவடிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், விதிகளுக்கு முரணாக, தேசிய நெடுஞ்சாலைகளில் புதிது புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

 

திருச்சி - சிதம்பரம் இடையிலான 134 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் திருச்சி - கல்லகம் இடையிலான 38.70 கி.மீ நீள சாலையில் கல்லக்குடி என்ற இடத்தில் நாளை மறுநாள் ஜூன் ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடி  திறக்கப்படவுள்ளது; கல்லகம் - மீன்சுருட்டி இடையிலான 59.74 கி.மீ நீள சாலையில் மனகெதி என்ற இடத்தில் கடந்த 27-ஆம் தேதி சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. இந்த இரு சுங்கச்சாவடிகளையும் சேர்த்து தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

 

சிதம்பரம் - திருச்சி இடையிலான 4 வழிச்சாலை பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. இச்சாலையில் மீன்சுருட்டி - சிதம்பரம் இடையிலான 31.35 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு கடந்த 26-ஆம் தேதி தான் பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன், காட்டுமன்னார்கோயிலில் மூன்றாவது சுங்கச்சாவடி அமைக்கப்படவுள்ளது. இவை தவிர, விழுப்புரம்  -வேலூர் இடையிலான 121 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலையில் இரு சுங்கச்சாவடிகள், கடலூர் - விருத்தாசலம் - சேலம் இடையிலான 92 கி.மீ சாலையில் இரு சுங்கச்சாவடிகள், அவினாசி & அவினாசி பாளையம்  இடையிலான 33 கி.மீ சாலையில் ஒரு சுங்கச்சாவடி,  தஞ்சாவூர் - பெரம்பலூர் இடையிலான 66 கி.மீ சாலையில் ஒரு சுங்கச்சாவடி என 6 புதிய சுங்கச்சாவடிகள் அடுத்த சில வாரங்களில் திறக்கப் படவுள்ளன. அவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடி எண்ணிக்கை 57 ஆக உயரும்.

 

pmk

 

தமிழ்நாட்டில் ஏற்கனவே சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. அவற்றின் எண்ணிக்கையை 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற அளவில் குறைக்க வேண்டும்; முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்; சுங்கக்கட்டணம் வசூல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும்; அது குறித்த விவரங்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிப்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 மூடப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் நெடுஞ்சாலைத் துறை கூறியிருந்தது.

 

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அவர்களும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி விதியை செயல்படுத்தி கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் மூடப்படும் என்று  கடந்த மார்ச் 22-ஆம் தேதி அறிவித்திருந்தார். அவரது கெடு முடிய இன்னும் 22 நாட்கள் மட்டுமே  உள்ள நிலையில், சுங்கச்சாவடிகளை மூடுவதற்காக தொடக்கக்கட்ட பணிகளைக் கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக அரசின் சார்பிலும் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் தரப்படவில்லை.

 

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க தேசிய நெடுஞ்சாலைகள் என்றாலே, அவை கட்டணச் சாலையாகத் தான் இருக்க வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2000 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகள் சுங்கச்சாலைகளாக மாற்றப் பட்டுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5324 கீ.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 5200 கி.மீ நீள சாலைகள், அதாவது 97.67% சுங்கச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. அதேநேரத்தில் தேசிய அளவில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 51,019 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 29,666 கி.மீ  நீள சாலைகளுக்கு, அதாவது 19.64% சாலைகளுக்கு மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பெரும் அநீதி. இந்த அநீதியை களைவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இந்தியாவில் அமைக்கப்படும் 4 வழிச்சாலைகளும், இரு வழிச்சாலைகளும் தனியார் மூலமாகத்தான் அமைக்கப்பட வேண்டும்; அதற்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மக்கள் நலன் கருதி சில சாலைகளை மத்திய அரசே அதன் சொந்த செலவில் அமைத்து, இலவச சாலைகளாக பராமரிக்கலாம். ஒவ்வொரு வாகனம் வாங்கப்படும் போது, அதன் விலையில் ஒரு பகுதி சாலைவரியாக வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விலையில், சாலை மற்றும் கட்டமைப்புத் தீர்வையாக இப்போது முறையே ரூ.5, ரூ.2 வசூலிக்கப்பட்டாலும் கூட, இதற்கு முன் லிட்டருக்கு ரூ.18 வசூலிக்கப்பட்டு வந்தது. அதன் மூலம் கிடைத்த, கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு அமைக்கலாம். இதுவே மக்களுக்கு பயனளிக்கும்.

 

தேசிய நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் என்பது மக்களை கசக்கிப் பிழிவதாக இருக்கக்கூடாது. எனவே, தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடிகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும். ஏற்கனவே  உள்ள சுங்கச்சாவடிகளையுன் 60 கி.மீக்கு ஒன்று என்ற அளவில் அரசு முறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்