கூடங்குளம் அணு உலையில் உள்ளூர் மக்கள் நிராகரிக்கப்பட்டு கேரளாவைச் சேர்ந்தவர்களுக்குப் பணி வழங்கியதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2013ஆம் ஆண்டுமுதல் நெல்லையில் உள்ள கூடங்குளம் அணு உலையில் அணு உலை 1, 2 ஆகியவற்றில் 1000 வாட் மின் உற்பத்தி நடைபெற்றுவருகிற நிலையில், அணுஉலை 3, 4 க்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றுவருகிறது. அதேபோல் 5 மற்றும் 6வது அணு உலைகளைத் தொடங்குவதற்கான பணிகளும் ஒருபுறம் நடைபெற்றுவருகிறது. 3, 4 அணு உலைகளில் சுமார் 8 ஆயிரத்திற்கு அதிகமான பணியாளர்கள் வேலைபார்த்துவருகின்றனர். ஆனால், இதில் கூடங்குளம், இடிந்தகரை, ராதாபுரம் உள்ளிட்ட உள்ளூரைச் சேர்ந்த மக்கள் மற்றும் அமைப்பினர்கள், பல்வேறு கட்சியினைச் சார்ந்தவர்கள் அணு உலையில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்னுரிமை வழங்க வேண்டும் என் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். சமீபத்தில் 3, 4 அணு உலைக்காக நடைபெற்ற ஒப்பந்தப் பணியாளர் தேர்வில், தேர்வு செய்யப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கேரளா உள்ளிட்ட வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உள்ளூர் மக்களுக்குப் பணி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்டோர் கூடங்குளம் அணு மின்நிலைய வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.