அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டை அவ்வைசண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் வரும் ஜூன் மாதம் 14- ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் குறித்தும், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.