ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரண்டாம் முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் நேற்று மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
முன்னதாக கடந்த வருடம் அக்.19 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், 131 நாட்களுக்கு பின் கடந்த மார்ச் 6 ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு மீண்டும் ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
மறுபுறம் தமிழ்நாடு ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளுக்கும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். அதேபோல், நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிரான தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரத்திற்குள், இரண்டாம் முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய தனி தீர்மானத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் குறித்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி இதனால் தமிழ்நாட்டின் நிர்வாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக்காட்டி இருந்தோம். மேலும் பொதுவெளியில் ஆளுநர் தெரிவித்து வரும் சர்ச்சை கருத்துக்கள் குறித்தும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த சூழ்நிலையில் இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் ஒரு நல்விளைவாக இன்று(10ம் தேதி) மாலை ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மேலும் இந்த சட்டமானது இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் பேரவைத் தலைவர் மூலமாக இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த அரசிதழில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஆணையம் அமைக்கப்படும். இதற்கு, தலைமைச் செயலாளர் பதவிக்கு குறையாத பதவியை வகித்து ஓய்வு பெற்றவர் ஆணையத் தலைவராக இருப்பார். ஓய்வு பெற்ற ஐ.ஜி. மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆணைய உறுப்பினர்களாக இருப்பர். அதேபோல், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரும் விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக இருப்பார். ஆன்லைன் விளையாட்டை வழங்குவோரை ஆணையம் கண்காணிக்கும், அவர்களை பற்றிய தரவுகளை பராமரிக்கும். ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை விளையாட்டு ஆணையம் தீர்த்து வைக்கும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.