கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையன் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுந்தரமூர்த்தி. இவர் மறைவையடுத்து அவரது இரண்டு மகள்கள் அவரது மனைவி ராஜாமணி(72) வீட்டில் தனியாக வசித்து வருகிறார். ராஜாமணி கடந்த 10-ஆம் தேதி இரவு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் நோய்க்கான மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது, அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜாமணி உள்ளே சென்று பார்த்த பொழுது தனி அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 57 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது பற்றித் தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த வீட்டில் உடைக்கப்பட்ட பீரோவில் இருந்த விரல் ரேகைகள் ஆய்வுக்கு அனுப்பிய நிலையில் அதன் முடிவில் அந்த விரல் ரேகைகள் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்கிற மாரிமுத்து மற்றும் அவருடன் சிறையில் இருந்த சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த உதயா ஆகிய இருவரின் விரல் ரேகைகள் ஒத்துப்போன நிலையில் இவர்கள் இருவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இவர்கள் இருவரின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் தொப்பையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கடலூர் மத்திய சிறை தலைமைக் காவலர் ஞானமணி என்பவர் மாரிமுத்து மற்றும் உதயா ஆகிய இருவரிடம் அதிக அளவில் பேசியுள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடலூர் மத்திய சிறை தலைமைக் காவலர் ஞானமணியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கொள்ளை சம்பவும் நடந்ததையும் தனது மூலம் அது நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.
மாரிமுத்து மற்றும் உதயா ஆகிய இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் கடலூர் மத்திய சிறையில் இருந்த பொழுது ஞானமணிக்கு அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதே போல் பண்ருட்டியை அடுத்த பெரிய காட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், எடுத்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விருத்தாசலம் இந்திரா நகரைச் சேர்ந்த கபார்தீன், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் எனச் சிறையில் இருந்த 6 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு ஞானமணியுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
அப்பொழுது எந்த வீட்டில் அதிகம் பணம் இருக்கும் எங்கு சுலபமாக கொள்ளையடிக்கலாம் என்று ஆறு பேருடன் ஞானமணி ஆலோசனை நடத்திய நிலையில் 72 வயது மூதாட்டியான ஞானமணி வீட்டின் எதிர் வீட்டில் உள்ள ராஜாமணி வீட்டில் இரவு நேரத்தில் அவர் தனியாக இருப்பார் என்றும் அதனைப் பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் நிலம் விற்று வைத்துள்ள கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கொள்ளையடிக்கலாம் எனவும் திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் திட்டத்தின்படி கடந்த 10ஆம் தேதி இரவு சுமார் 11மணி அளவில் ஞானமணியைத் தவிர்த்து மற்ற ஆறு பேரும் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தனி அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 57 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஞான மணியை வைத்து மாரிமுத்து உள்ளிட்ட 6 நபர்கள் செல்லும் இடங்களை அடுத்தடுத்து ஆய்வு செய்த பொழுது அவர்கள் சனிக்கிழமை இரவு கூவாகம் நத்தம் ஏரிக்கரை பகுதியில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பங்கு பிரித்து கொண்டு இருந்த போது மாரிமுத்து உள்ளிட்ட ஆறு பேரையும் சுற்றி வளைத்தனர். அதில் மோகன்தாஸ் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மற்ற ஆறு நபர்கள் போலீஸ் பிடியில் சிக்கினார். அவர்களிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் அவர்கள் 50 சவரன் தங்க நகைகளை பல்வேறு நபர்களிடம் கொடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 7 சவரன் தங்க நகைகளை விற்பனை செய்து வைத்திருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணமும், அவர்கள் பல்வேறு நபர்களிடம் கொடுத்து வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள மோகன்தாஸை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களை வைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சமய்சிங்மீனா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கடந்த 10-ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக டிஐஜி திஷாமிட்டல் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் மேற்பார்வையில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசாரை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு குறுகிய காலத்தில் குற்றவாளிகளைக் கைது செய்தும் கொள்ளைப் போன 50 சவரன் தங்க நகை மற்றும் 7 சவரன் தங்க நகைக்கான ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்றும் இதற்காக கடுமையாக உழைத்த போலீசாரை பாராட்டுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இதற்கென்று காவல் நிலையம் அமைக்கப்படுமா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் இது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி குற்ற சம்பவங்களைத் தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என கூறினார்.