திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் இரண்டு பெண்கள் ரமேஷை தனிமையில் இருக்க அழைத்ததாகவும், அப்போது அங்கு வந்த போது மூன்று ஆண்கள் பெண்களுடன் ரமேஷ் இருப்பது போன்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாகவும், பின்னர் ரமேஷிடம் இருந்த செல்போன், பணம் உள்ளிட்டவையை கத்தியை காட்டி மிரட்டி பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் பழனி டி.எஸ்.பி.தனஜெயம், ஆய்வாளர் மணிமாறன் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மோசடி கும்பல் பழனி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விசாரித்த போது சண்முகநதி அருகே மோசடி கும்பல் இருப்பதை உறுதி செய்த போலீஸார் சுற்றி வளைத்து இரண்டு பெண்கள், மூன்று ஆண்களை கைது செய்தனர்.
காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட நபர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த குணசேகரன். நத்தத்தைச் சேர்ந்த பாலமுருகன், திண்டுக்கல்லை சேர்ந்த லோகநாதன், சின்னாள பட்டியைச் சேர்ந்த பவித்ரா, சீலப்பாடியை சேர்ந்த காமாட்சி என்பது தெரிய வந்தது. மேலும் கடந்த சில நாட்கள் முன்பு ரமேஷ் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது இந்த கும்பல் என்பதும், இது போன்று பல இளைஞர்களை தனிமையில் இருக்க அழைத்து பணத்தை பறித்து விரட்டி அடித்ததும் தெரியவந்துள்ளது.
பிடிபட்ட நபர்கள் பயன்படுத்திய கார் கொடைக்கானலில் இருந்து திருடி வந்தது தெரியவந்தது . மேலும் அரிவாள், மூன்று செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர் மீதும் திருட்டு, வழிப்பறி, கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மோசடி கும்பல் பழனி மற்றும் கொடைக்கானலில் தனியார் விடுதிகளில் அறை எடுத்து தங்குவதும், தனியாக வரும் ஆண்களை குறி வைத்து பாலியல் தொழிலுக்கு பெண்களை வைத்து அழைப்பதும், பெண்கள் ஆண்களுடன் இருப்பது போன்று வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிப்பதும், பணம் கொடுக்க மறுத்தால் ஆபாச வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவோம் என விரட்டி பணம் பறித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலமுறை குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது புகார் வராததால் தொடர்ச்சியாக இந்த சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். முதல்முறையாக ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மோசடி கும்பல் போலீசாரிடம் சிக்கி உள்ளது.