நாகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடச் சென்ற மர்ம நபர்கள் எதிர்பார்த்து வந்த அளவு பணமோ பொருட்களோ இல்லாததால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று வீட்டில் No என்று எழுதி வைத்துச் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி ஆசாத் நகரைச் சேர்ந்தவர்கள் ஜியாவுதீன், சமீமா. இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்கு வெளியூர் சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் வழியாகச் சென்று வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
அக்கம் பக்கத்தில் குடியிருப்போர் விடியற்காலையில் போகும்போது வீட்டின் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஜியாவுதீனுக்கு தெரியப்படுத்தினர். பதறியடித்து ஓடி வந்தவர்கள், வீட்டிலிருந்த 5 ஆயிரம் ரொக்கமும், விலை உயர்ந்த வாட்சுகளும், உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணமும் காணவில்லை எனக் கூறியுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்டு மர்ம நபர்கள் வீட்டை நோட்டமிட்டு 'நோ' என்று குறியீடு வைத்துச் சென்றுள்ளனர். அப்படி என்றால் திருடுபவர்கள் கும்பலாகச் செயல்படுகிறார்களா, அவர்களுக்கான குறியீடா என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து திருப்பூண்டி பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெறுவதால் திருப்பூண்டி பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.