Skip to main content

கஜா புயல் பாதிப்பு: தமிழக அரசின் உதவி மக்களின் கண்ணீரைத் துடைக்காது: ராமதாஸ்

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
Ramadoss



கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல. இது மக்களின் கண்ணீரைத் துடைக்காது. துயரங்களைப் போக்காது என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவிரிப் பாசன மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பினாமி அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக மோசமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததால், அங்குள்ள மக்களிடையே எழுந்துள்ள கோபமும், அக்கோபம் ஆட்சியாளர்கள் மீது திரும்புவதையும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
 

கஜா புயலால் காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், சேதங்களும் வரலாறு காணாதவை. அங்குள்ள மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக சேர்த்த அனைத்தையும் ஒற்றை இரவில் இழந்து விட்டனர். கஜா புயல் தாக்குவதற்கு முந்தைய நாள் இரவு வரை கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் அடுத்த நாள் காலையில் ஒன்றுமில்லாதவர்களாக மாறி விட்டனர். அவர்கள் வாழ்வாதாரம் முழுவதையும்  புயல் வாரிச் சுருட்டி வீசி விட்டது. முதல் நாள் இரவு வரை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் உணவு வழங்கியவர்கள் அடுத்த நாள் காலையில் ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாதவர்களாகி விட்டனர். இந்த வலி எவ்வளவு கொடுமையானது என்பதை அனுபவிக்கும் மக்களால் மட்டுமே உணர முடியும்.
 

இந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்ப்பது ஆதரவையும், ஆறுதலையும் தான். ‘பாதிக்கப்பட்ட உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்’ என்று கூறி அவர்கள் மனதில் நம்பிக்கையை மட்டும் விதைத்து விட்டால், அது கொடுக்கும் தைரியத்தில் இழந்தவற்றை மறு உருவாக்கம் செய்யும் பணிகளில் அவர்கள் முழுவீச்சில் இறங்கியிருப்பார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் ஒருவேளை உணவு வழங்குவதற்குக் கூட தமிழக அரசு ஏற்பாடுகளை செய்யவில்லை. புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற அமைச்சர்கள், சுற்றுலா சென்றதாக கருதிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்களே தவிர மக்கள் குறைகளை களையவில்லை.
 

புயலால் ஏற்படும் பாதிப்புகள் சரி செய்யப்படும் என்று கூறியிருக்க வேண்டிய அமைச்சர்கள், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியதால் தான் அவர்கள் மீது மக்களின் கோபம் திரும்பியது. சொந்தத்  தொகுதியான வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள்  துரத்தியடித்ததற்குக் காரணம் இந்த கோபம் தான். தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு,  கடம்பூர் ராஜு ஆகியோர் முற்றுகையிடப்பட்டதற்கு காரணமும் இதே கோபம் தான். அ.தி.மு.க.வின்  துணை அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் சொந்த ஊரிலேயே மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் மக்கள் கோபமடைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்  என்றால், மற்ற பகுதிகளில் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருந்திருக்கும் என்பதை யூகிக்கலாம்.
 

மக்கள் கோபத்துடன் போராட்டம் நடத்தும் இடங்களில் அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய அமைச்சர்கள் தங்களின் அதிகாரத் தோரணையை காட்டியது தான் நிலைமையை மோசமாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டம் தெலுங்கன்குடிக்காடு என்ற இடத்தில் முற்றுகையிட்ட மக்களை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தகாத வார்த்தைகளால் திட்டியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடும் தமக்கும் இத்தகைய வரவேற்பு தான் கிடைக்கக்கூடும் என்பதை உணர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில்  நேற்றிரவு பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறார். இது மக்கள் கோபத்தை தணிக்கவில்லை; மாறாக மக்களின் கோபத்தை அதிகரித்திருக்கிறது என்பது தான் உண்மை.
 

நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, அதாவது ஏக்கருக்கு ரூ.5400 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது சேதமடைந்த பயிர்களை அகற்றி நிலத்தை சீரமைப்பதற்குக் கூட போதாது. ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும் போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்த அரசு, இப்போது அதில் கிட்டத்தட்ட நூற்றில் ஒரு பங்கு மட்டுமே இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? தென்னை மரங்களில் ஒருமுறை தேங்காய் பறித்தாலே இதைவிட அதிக வருமானம் கிடைக்கும் எனும் நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி யானைப்பசிக்கு சோளப்பொறியாகவே அமையும். இது போதுமானதல்ல.
 

சேதமடைந்த குடிசைகள், படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட எந்தப் பொருட்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. இது மக்களின் கண்ணீரைத் துடைக்காது. துயரங்களைப் போக்காது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடும் முதலமைச்சர் மக்களின் பாதிப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து அதனடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ற வகையில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்