மக்களால் நான்; மக்களுக்காக நான் எனக் கூறிய ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்க கூடாது? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, ஜெயலலிதாவின் எண்ணமும் அதுதான் என்பதால் ஆட்சேபனை ஏதும் இல்லை என தீபா, தீபக் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக விளக்கமளிக்க நேரில் ஆஜராகும்படி, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவருக்கும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இருவரும் இன்று நேரில் ஆஜராகினர். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டாம் நிலை வாரிசுகள் இருந்தாலும், நிர்வாகியை நியமிக்கலாம் என வாதிட்டார்.

தொடர்ந்து நீதிபதிகள், புகழேந்தி வழக்கு தொடர்ந்த பிறகு, நீதிமன்றத்தை நாடியது ஏன்? மக்களால் நான்; மக்களுக்காக நான் எனக் கூறிய ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்க கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தீபக், வாரிசு சான்று கோரி விண்ணப்பித்திருந்ததால், தன்னை நிர்வாகியாக நியமிக்க கோரி வழக்கு தொடர காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் சொத்துக்களில் சில பகுதிகளை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை எனவும், தன்னை அனுமதிக்காததால் தான், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை எனவும் தீபா பதிலளித்தார்.
தொடர்ந்து நீதிபதிகளிடம் முறையிட்ட தீபா, போயஸ் தோட்ட இல்லம் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், போயஸ் தோட்ட இல்லத்துக்குள் செல்ல தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, சட்டப்பூர்வ வாரிசுகளை அனுமதிக்காதது ஏன் என நீதிபதிகள் கேட்டதற்கு, இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.