கஜா புயலால் தம் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கும் விவசாயிகளுக்கு உரிய நியாமான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில தலைவர் P. அய்யாக்கண்ணு தலைமையில் காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருச்சி காவிரி ஆறு பக்கம் உள்ள ஓயாமெரி சுடுகாடு அருகில் 23.11.2018 வெள்ளிக்கிழமை காலை இந்த போராட்டம் நடைப்பெற்றது.
இதுதொடர்பாக அய்யாக்கண்ணு நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
கடந்த 16.11.2018 அன்று கஜா புயலால் டெல்டா மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்புக்கு உள்ளது. அப்பாதிப்பில் விவசாயிகள் தம் விவசாய நிலங்களில் இருந்த விளைபொருட்கள் நெல், தென்னை, வாழை, கரும்பு, பாமாயில், கொய்யா போன்ற எண்ணற்ற பயிர்கள் கஜா புயலால் ஓடிந்துவிழுந்து, நீரில் மூழ்கியும் அழிந்தால் விவசாயிகள் தம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாய் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
8 வழி சாலைக்கு விவசாய நிலங்களை எடுக்கும்போது பாதிப்புக்கு உண்டான விவசாய பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கியதும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதும் நீங்களே பாருங்கள்.
8 வழிச்சாலை - கஜா புயல்
தென்னை 1க்கு ரூ.10000/- - ரூ.1100/-
நெல்லுக்கு(1 எக்டேர்) ரூ.44,441/- - ரூ.13,500/-
வாழைக்கு (1ஏக்கருக்கு) ரூ.1,00,000/- - ரூ.5,500/-
கரும்புக்கு (1ஏக்கருக்கு )ரூ.50,000/- - ரூ.5,500/-
கஜா புயலால் தம் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கும் விவசாயிகளுக்கு உரிய நியாமான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் விரைந்து வழங்க வேண்டும் என்று இந்த போராட்டத்தை நடத்தினோம் என்றார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி M.C. பழனிவேல், சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலார்கள் மரவனூர் செந்தில், ஜான்மேல்க்கியோராஜ், போராட்ட குழு தலைவர் வீரப்பூர் ராமலிங்கம், கரூர் மாவட்ட தலைவர் ராமசாமி, சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் பங்குகொண்டு காவிரி ஆற்றுக்குள் மணலில் புதைந்து நூதன போராட்டம் நடத்தினார்கள்.