ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கல் நகரைச்சுற்றியுள்ள 55 கிராமங்களிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பஸ் மறியல் நடத்த முடிவு செய்துள்ளனர் சிக்கல் கிராம மக்கள்.
இதுக்குறித்து பேசிய அக்கிராம மக்களோ, " சிக்கல் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள 55 கிராமங்களிலும் காவிரிகுடிநீருக்காக குழாய்களில் தவமிருக்கின்றனர். கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதால், கன்னிராஜபுரம், மேலச்செல்வனூர், கமுதி கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் குடிநீரை டேங்கர் மூலம் குடம் ரூ.6க்கும், சுத்திகரிக்கப்பட்ட நீர் ரூ.15க்கும் பிடித்து பயன்படுத்தி வருகிறோம்.
விவசாயிகள், உப்பள கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை எளியவர்கள் தங்களது வருமானத்தின் ஒருபகுதியை குடிநீருக்காக செலவு செய்துவருகின்றனர். ஊராட்சிகளில் (ஆர்.ஓ., பிளாண்ட்) சுத்திகரிப்பு குடிநீராக மாற்றினால் கிராம மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். எங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற ஜூன் 11 (செவ்வாய்கிழமை) அன்று காலையில் சிக்கல் பேருந்து நிலையம் அருகே பஸ்மறியல் போராட்டம் நடைபெறும்." என்கின்றனர் அவர்கள். இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.