Skip to main content

கஜா புயல் தாக்கி 6 மாதமாகியும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை; உடனடியாக வழங்க சிபிஎம் கோரிக்கை 

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

 


கடந்த ஆண்டு நவம்பர் 16 ந்தேதி வீசிய கஜா புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை மாவட்டம் மிகக்கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது. ஏராளான மரங்கள், வீடுகள் சேதமடைந்தன. அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால், கிராமப்பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. 

 

c

 

இதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வெண்ணாவல்குடி ஊராட்சியைச் சேர்ந்த கருவன்குடியிருப்பு கிராமத்தில் மின் கம்பிகளைத் தாண்டிச் சென்று தான் வீடுகளுக்கு தண்ணீர் எடுக்கக் செல்ல வேண்டும். 25 நாட்களாக மின்சாரம் இல்லாததால் கம்பிகளை தூக்கி ஒதுக்கிக்கொண்டு கிராமத்தினர் தண்ணீர் எடுக்கச் சென்று கொண்டிருந்தனர்.

 

அதே போலத்தான் 10.12.2018 அன்றும் அரையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கி.செ. முத்துச்சாமி, மனைவி சுசீலா(வயது48), கருவன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சக்திவேல்(வயது24) ஆகிய இருவரும் தண்ணீர் எடுக்கச் சென்றனர். அப்போது புயலில் சாய்ந்து கிடந்த மின்கம்பிகளை ஒதுக்கிக்கொண்டு தண்ணீர் எடுப்பதற்காக மின்கம்பிகளை பிடித்துள்ளனர். 25 நாட்களுக்கு பிறகு கீழே கிடந்த மின்கம்பிகளில் மின்சாரம் வந்த்தால் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

மின்சார வாரியத்தின் கவனக்குறைவால் மின்சாரம் தாக்கி இறந்ததால் அப்பொழுது தமிழக அரசு அறிவித்திருந்த கஜா புயலில் இறந்தவர்களுக்கான ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆலங்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் பொதுமக்கள் சுமார் 8 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் “மின்சாரம் தாக்கி இறந்த நபர்களுக்கு நிவாரணம் தலா ரூ.10 லட்சம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்து நிவாரணம் பெற்று வழங்கப்படும் எனவும், இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு விதிகளின்படி கருணை அடிப்படையில் வேலைவாய்ப்புப் பெற அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்” என எழுத்துப்பூர்வமாக கோட்டாட்டசியர் உறுதியளித்துள்ளார்.

 

அதன் பிறகு சடலங்களை மருத்துவப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல பொதுமக்கள் அனுதித்தனர். மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அஞ்சலி செலுத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இருவருக்கும் தனது சொந்த பணத்தில் தலா ரூ. ஒரு லட்சம் நிதி வழங்கியதுடன்..  கஜா புயல் நிவாரணமான ரூ.10 லட்சம் கிடைப்பதற்கு முதலமைச்சரிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளதாகவும், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அங்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

 

தொடர்ந்து சில நாட்களில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 பேருக்கு முதலமைச்சர் பொது நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதிலும் சுசீலா, மற்றும் சக்திவேல் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.   ஆனால், சுமார் 5 மாதங்கள் கடந்தும் இருவருக்கும் இதுநாள் வரை எந்தவிதமான இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. 


 
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் சு.மதியழகன் உள்ளிட்டோர் வியாழக்கிழமையன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரைநேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவுக்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் புயலில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அனைவருக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இன்னும் காலங்கடத்தினால் கூட்டணிக் கட்சிகளை இணைத்து போராட்டங்களை நடத்துவோம் என்றனர். 
                

சார்ந்த செய்திகள்